எம்.ஜி.ஆர். சிவாஜி என்கிற இரு இமயமலைகளை ஈர்த்தவர் சரோஜாதேவி! நீதிபதியின் பேச்சால் பரபரப்பு

நின்றால் அழகு நடந்தால் அழகு.. என்று விருது விழாவில் நடிகையின் அழகை ஒரு நீதிபதி கலகலப்பாக வர்ணித்தார்.இது பற்றிய விவரம் வருமாறு;
விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஸ்ரீ நாகி ரெட்டி நினைவு திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று மாலை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சென்ற ஆண்டின் மிகச்சிறந்த பொழுது போக்கு திரைப்படத்துக்கான விருது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’படத்துக்கு வழங்கப் பட்டது.
ஸ்டுடியோ க்ரீன் சார்பில் அதன் இணை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விருதை பெற்றுக்கொண்டார். விருது வழங்கி ஜார்கண்ட் உயர்நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.கற்பக விநாயகம் பேசினார்,அவர்பேசும் போது..
” இந்த விழாவில் நான் கலந்து கொள்வதில் பெருமைப் படுகிறேன். ஒரு மனிதன் உயர்வதற்கு பின்பற்ற ஐந்து விஷயங்கள் தேவை .
1. இறை நம்பிக்கை. 2. உழைப்பு 3. ஒழுக்கம் 4. நாணயம் 5.மனிதநேயம்.
இப்படி பின்பற்றி உயர்ந்தவர்களில் எனக்கு மூன்று பேரை பிடிக்கும். பி.நாகிரெட்டி,ஆரூர்தாஸ், எஸ்.பி.முத்துராமன், . இவர்களின் ஆற்றல் சாதனைகளைவிட தனிமனித ஒழுக்கம் மிகச்சிறந்தது என்று மதிக்கப் படுகிறவர்கள்.நாகிரெட்டி சாதனைகளாலும் பேசப்படுகிறவர்.
இங்கே சரோஜாதேவி வந்திருக்கிறார். அவர் நின்றாலும் அழகு; நடந்தாலும் அழகு; ஆடினாலும்அழகு;ஓடினாலும்அழகு;பேசினாலும் அழகு; ஏன் அழுதாலும் அழகுதான். எம்.ஜி.ஆர். சிவாஜி என்கிற இரு இமயமலைகளை ஈர்த்தவர் சரோஜாதேவி. எனக்கு இன்றும் பழைய நினைவுகள் நிழலாடுகின்றன.எனக்கு சினிமா மீது மிகவும் ஆர்வம் பள்ளி. கல்லூரி பருவத்தில் நிறைய நாடகங்களில் நடித்திருக்கிறேன். சுமார் 500 நாடகங்களில் நடித்திருப்பேன். பாரதியாக அர்ஜுனனாக எல்லாம்நாடகங்களில் நடித்திருக்கிறேன்.
எனக்கு சினிமாவில் தெரிந்தவர் எம்.ஜி.ஆர்தான்.நான் அவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். நான் எம்.ஜி.ஆருக்காக சிறை சென்று இருக்கிறேன். நான் சாதாரண வக்கீலாக இருந்தவன் என்னை அரசு வக்கீலாக்கி அழகுபார்த்தவர் எம்.ஜி.ஆர்தான். ஆம் அவர்தான் என்னை அரசு வழக்கறிஞராக்கினார். அப்போது எனக்கென்ன தெரியும் என்றேன்.உனக்குத்தெரியும் என்றார்.நான் நீதிபதியானபோது அவர் உயிருடன் இல்லை. ஆனால் அவரது ஆசீர்வாதம் இருந்தது. இந்த நிகழ்ச்சியிலும் ரெட்டியாரின்ஆசீர்வாதம் நிறைந்து இருக்கிறது. உழைப்பவரே உயர்ந்தவர் என்பார் எம்.ஜி.ஆர். உழைப்பவரை உயர்த்தியவர் நாகிரெட்டி அவர்கள்.
ஒரு முறை ஏவிஎம் திருமணவிழாவில் ஒரு பந்தியில் சாப்பிட்ட இலைகளை எடுக்க ஆள் வரவில்லை. ரெட்டியாரே சாப்பிட்ட இலைகளை எடுத்தார். பின்னர் சாப்பிட வந்தவர்கள் எடுக்க ஆரம்பித்தனர் அவ்வளவு எளிமையானவர் நாகிரெட்டியார்.
அவர் மற்றவர்களுக்காக வாழ்ந்தவர்; பிறருக்காக வாழ்ந்து பெருமை பெற்றவர். மரங்களில் 3 வகை மரங்கள் உண்டு. பாதிரிமரம் பூக்கும் ,காய்க்காது. பலாமரம் காய்க்கும் ,பூக்காது. மாமரம் பூக்கும், காய்க்கும் ,பழுக்கும்.அதே போல மனிதர்களிலும் 3 வகைஉண்டு. சிலர் பேசுவார்கள் செய்யமாட்டார்கள். சிலர்செய்வார்கள், பேசமாட்டார்கள். சிலர் மட்டுமே பேசுவார்கள்,செய்வார்கள்,உதவுவார்கள்.
நாகிரெட்டியார் மாமரம் போன்றவர். அவர் பேசுவார்,செய்வார்,உதவுவார்.அவர் பெயரில் விருது பெறும் மெட்ராஸ்’ தயாரிப்பாளர், படக்குழுவினரை பாராட்டுகிறேன்.வாழ்த்துகிறேன்.
படிக்கும் போது நான் மந்தமான மாணவன்தான் நான் எஸ்.எஸ்.எல்.சியில் பெயிலாகி விட்டேன். தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தேன். காந்தியின் ‘சத்தியசோதனை’ படித்தேன். அது என் மனதை மாற்றியது. பாடமாக அமைந்தது. நல்ல படம் எடுங்கள் பாடமும் சொல்லுங்கள்
இப்போது படங்களில் 99% வன்முறைதான் இருக்கிறது. கருத்து ஒரு சகவிகிதம்தான் இருக்கிறது. எம்.ஜி.ஆர். படங்களில் எவ்வளவு கருத்தைக் சொல்லியிருக்கிறார். ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தார்.’பாடலைப் பாருங்கள். ‘உன்னை அறிந்தால்.’ பாடலைப் பாருங்கள். இரண்டே வரிகளில் எவ்வளவு கருத்துகள்.
படம் எடுங்கள் பாடமும் சொல்லுங்கள்.படங்களில் நல்ல கருத்தும் இருக்க வேண்டும். “என்று கூறினார்.
கதை வசனகர்த்தா டாக்டர் ஆரூர்தாஸ் பேசும் போது
” நான் சினிமாவுக்கு வர நினைத்ததே இல்லை. சினிமாமீது எனக்கு விருப்பமோ கனவோ லட்சியமோ ஆசையோ இருந்ததில்லை. அப்பாவின் விருப்பமான தமிழாசிரியர் ஆகவே விரும்பினேன்.. புலவருக்குப் படித்தேன். நான் எழுதிய ஒரு நாடகத்தைப் பார்த்து தஞ்சை ராமையாதாஸ் என்னை சினிமாவுக்கு அழைத்தார். உதவியாளராக்கி வசனம் எழுதப் பயிற்சி தந்தார். இதுவரை 1000 படங்கள் முடித்துவிட்டேன்.
விஜயா வாஹினி ஸ்டுடியோ என்வீடு மாதிரி.நாகிரெட்டி எனக்கு சகோதரர் போன்றவர்.50 ரூபாய் மாத சம்பளத்தில் என்னை முதலில் வேலைக்கு சேர்த்துக் கொண்டவர். நாகிரெட்டிதான் சின்னப்பா தேவரிடம் என்னை அறிமுகப் படுத்தினார். நல்ல உழைப்பாளி. தொழிலாளர்களை நம்பியவர்.” என்றார்.
சரோஜாதேவி பேசும்போது
” நானும் எம்.ஜி.ஆரும் நடித்த ‘எங்கள் வீட்டுப்பிள்ளை’ படப்பிடிப்பு வாஹினி ஸ்டுடியோவில் எட்டாவது தளத்தில் நடந்தது. முதல்நாள் அந்தகடைத்தெரு செட் தீப்பிடித்து எரிந்து விட்டது. இதைப் போய் அவரிடம் சொன்ன போது தொழிலாளர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றார். அந்த அளவுக்குதொழிலாளர்கள் மீது நம்பிக்கை வைத்தவர்.அவர்களும் முழுமூச்சாக இறங்கி ஒரேநாளில் சரி செய்து விட்டார்கள். ” என்றார்.
விழாவில் மெட்ராஸ்’ தயாரிப்பாளருக்கு ஒன்றரை லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப் பட்டது.
‘மெட்ராஸ்’ படக்குழுவைச் சேர்ந்த நடிகர் கலையரசன், நடிகை ரித்விகா, கலை இயக்குநர் ராமலிங்கம் ஒளிப்பதிவாளர் முரளி, எடிட்டர் பிரவீன் ஆகியோரும் கௌரவிக்கப் பட்டனர். இந்த விருது வழங்கும் விழாவை இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் முன்னெடுத்து வழிகாட்டினார்.


முன்னதாக அனைவரையும் விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளை குழுமத்தைச் சேர்ந்த வெங்கட்ராம ரெட்டி, பாரதி ரெட்டி ஆகியோர் வரவேற்றனர். நிறைவாக பொது மேலாளர் ராம்பாபு நன்றி கூறினார். ஜெயாடிவி ரம்யா நிகழச்சியைத் தொகுத்து வழங்கினார்.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose