துபாயில் கோலாகலமாக வெளியான உத்தம வில்லன்... ரசிகர்களோடு படம் பார்த்த கமல்


கமல் ஹாஸன் நடித்த உத்தமவில்லன் வியாழக்கிழமை மாலை துபாயில் திரையிடப்பட்டது. கமல் ஹாஸன், பூஜா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ள உத்தம வில்லன் படம் தமிழகத்தில் இன்று ரிலீஸாகியுள்ளது. முன்னதாக வியாழக்கிழமை மாலை துபாயில் உத்தம வில்லன் திரையிடப்பட்டது. இந்த திரைப்படம் துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெளியிடப்பட்டது.

துபாய் கோல்டன் சினிமாஸில் நடந்த வெளியீட்டு நிகழ்ச்சியில் கமல் ஹாஸன் கலந்து கொண்டார். இதனால் ரசிகர்கள் திரைப்படத்தைக் காண மிகவும் ஆர்வத்துடன் வந்திருந்தனர். புர் துபாயில் உள்ள கோல்டன் சினிமாஸில் 1, 500 பேர் அமர்ந்து படம் பார்க்கலாம். கமல் ஹாஸன் வருகையால் நேற்று கோல்டன் சினிமாஸ் களைகட்டியிருந்தது. கோல்டன் சினிமாஸ் மூடப்பட உள்ளது. அந்த தியேட்டரில் வெளியாகியுள்ள கடைசி படம் உத்தம வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷார்ஜா திரையரங்கில் படம் பார்த்த மதுரையைச் சேர்ந்த டிசைனர் சீனி பாவா கூறுகையில், படத்தின் காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக கமல் குடுமியுடன் தோன்றுவது காமெடியாக இருந்தது. படம் போரடிக்காமல் குடும்பத்துடன் காணும் வகையில் அமைந்திருந்தது என்றார். துபாயில் படம் பார்த்த பொறியாளர் ஜுபைர் கூறுகையில், கமலின் நடிப்பு அவரது நடிப்புத்திறனை சிறப்பாக வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. கமல் தனக்கு வந்துள்ள நோய் குறித்து குடும்பத்தினருக்கும், குறிப்பாக மகனுக்கு தெரிவிக்கும் விதம் வித்தியாசமானது. எந்த நோய் வந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் பணியாற்ற வேண்டும் என்பதனை கமலின் நடிப்பு உணர்த்தியது என்றார்.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose