வில்லங்கமான கருத்து சொன்னால் அதிலிருந்து விலகாமல் நிற்பவர் ராம் கோபால் வர்மா. தற்போது அவர் பல்டியடித்த ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. சமீபத்தில் ‘ஓ காதல் கண்மணி’ படத்தை பார்த்துவிட்டு துல்கர் சல்மானை பாராட்டுவதாக கூறி அவரது தந்தை மம்மூட்டியை லெப்ட்ரைட் வாங்கி இருந்தார். ‘துல்கரிடமிருந்து மம்மூட்டி நடிப்பு கற்க வேண்டும். இதுவரை மம்மூட்டிக்கு தந்த விருதுகளை திரும்ப பெறவேண்டும்’ என கூறி இருந்தார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த துல்கர், வர்மாவுக்கு பதிலடி கொடுத்திருந்தார். ‘10 ஜென்மம் எடுத்தாலும் என் தந்தை நடித்ததுபோல் ஒரு மில்லி அளவுகூட என்னால் நடிக்க முடியாது’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் வர்மாவின் பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்தது. நடிகை நவ்யா நாயர் மற்றும் சில இயக்குனர்கள் வர்மாவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். தொடர்ச்சியாக வந்த எதிர்ப்பை கண்டு வெலவெலத்துப்போன வர்மா, திடீர் பல்டியடித்தார். மம்மூட்டி பற்றி தெரிவித்த கருத்துக்கு தனது டுவிட்டரில் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதில், ‘துல்கர்... நான் சொன்ன கருத்தால் உன் தந்தை மம்மூட்டி மனம் புண்பட்டிருந்தால் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனாலும் என் மனசாட்சிப்படி இன்னும் கூட உன் தந்தையைவிட நீதான் சிறந்த நடிகர் என்றே எண்ணுகிறேன். இந்திய பிரஜைக்கே உரிய கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் இதை வெளிப்படுத்துகிறேன்’ என குறிப்பிட்டிருக்கிறார்.
0 comments:
Post a Comment