விஜயகாந்த் வீட்டு வாசலில் ஜெயலலிதா படம்? வெறுப்பேற்றும் நடிகர்?!

அதென்னவோ தெரியவில்லை, விஜயகாந்துக்கு அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களால்தான் அடாவடி தொல்லை வருகிறது. அதே தெருவில் இருக்கும் நடிகர் வடிவேலுவின் ஆபிஸ் முன் கார் நிறுத்தும் போது ஏற்பட்ட தகராறுதான் பெரிய குத்து வெட்டு லெவலுக்கு போய், வடிவேலுவை திமுக பக்கமே தள்ளிவிட்டது. அதற்கப்புறம் அவர் என்னவானார் என்பதைதான் ஜனங்க பார்த்தாங்களே! இப்போதும் அதே டைப்பில் இன்னொரு பிரச்சனை.

திமுக வின் முன்னாள் எம்.பி.யும் தற்போது அதிமுகவில் சங்கமம் ஆகிவிட்ட ஜே.கே.ரித்தீஷின் நண்பர் விஜய் கார்த்திக். ஓய்வு நேரத்தில் சினிமாவிலும், முழு நேரத்தில் அதிமுக வில் கட்சிப்பணியும் ஆற்றிக் கொண்டிருக்கும் இவர், ஜே.கே.ரித்தீஷ் நல்லாசியுடன் புதிய படம் ஒன்றை துவங்கி அதில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார். படத்திற்கு ‘அராத்து’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இப்படத்தை விஜய்யை வைத்து ‘ப்ரியமுடன்’ என்ற படத்தை இயக்கிய வின்சென்ட் செல்வா இயக்குகிறார். இவரும் தனது பெயரை ஷெல்வா என்று மாற்றிக் கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் கூட பிரச்சனை இல்லை. இனிமேல்தான் சிக்கலே. இவர்கள் தங்கள் புதிய பட அலுவலகத்தை எங்கு வைத்திருக்கிறார்கள் தெரியுமா? விஜயகாந்த் வீட்டுக்கு நேர் எதிரில்.

அலுவலக வாசலிலேயே ‘அம்மாவின்’ போஸ்டர்களும் வினைல்களும் அமர்க்களப்படுகிறது. வீட்டை விட்டு வரும்போதும் போகும் போதும் விஜயகாந்த் கண்களுக்கு இதுவே பளிச்சென்று தெரிவதால் கடும் எரிச்சலுக்கு ஆளாகிறாராம் அவர். சம்பந்தப்பட்ட அலுவலகத்தை வாடகைக்கு கொடுத்த வீட்டின் உரிமையாளரிடம், ‘இந்த சினிமா கம்பெனிய அங்கிருந்து கொஞ்சம் நகர்த்த முடியுமா பாருங்க’ என்று கேட்டதாகவும் கூறுகிறார்கள்.

அடிக்கடி விஜயகாந்த் வீட்டுக்கு வந்து போகும் தேமுதிக தொண்டர்களால் இந்த சினிமா அலுவலகத்திற்குள் கல்வீச்சு நடக்குமோ என்று தெருவாசிகள் கவலைப்பட, ‘ரெண்டு கல்லை விட்டுதான் பாருங்களேன்’ என்கிற ‘கெத்தோடு’ அம்மா படத்தை இன்னும் கொஞ்சம் பெரிசாக வைக்க பிளான் போட்டுக் கொண்டிருக்கிறாராம் ஹீரோ விஜய் கார்த்திக்.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose