இன்னும் சில மணி நேரங்களில் திரைக்கு வரப்போகிறது ‘வலியவன்’ திரைப்படம். ஜெய் ஆன்ட்ரியா நடித்திருக்கும் இந்த படத்தை எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கியிருக்கிறார். யாரோ ஒரு புதிய தயாரிப்பாளர் இந்த கூட்டணியை நம்பி ஓடுற விமானத்திலிருந்து கீழே குதித்திருக்கிறார். எங்கெல்லாம் சிராய்ப்பு? எந்தெந்த பார்ட்டுகளில் ஒத்தடம் தர வேண்டும்? என்பதையெல்லாம் படத்தின் கலெக்ஷன்தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆர்யா, விஷால், விக்ரம் போன்ற அடுத்த கட்ட ஹீரோக்களுக்கே இங்கு பதினைந்து கோடியில் படம் எடுக்க அஞ்சுவார்கள் தயாரிப்பாளர்கள். ஏனென்றால் இவர்களின் பிசினஸ் அப்படி. ஆனால் வெறும் ஆறு கோடி மட்டுமே மார்க்கெட் வியாபாரம் உள்ள ஜெய்யை வைத்து இந்த ‘வலியவன்’ படத்தை பதினேழு கோடி ரூபாய்க்கு எடுத்திருக்கிறார்களாம். ஜெய்க்கு மூன்று கோடி சம்பளம். இயக்குனர் சரவணனுக்கு மூன்று கோடி சம்பளம். கதாநாயகி லட்சணத்தை கடந்து நாலைந்து வருஷங்கள் ஆகிவிட்ட ஆன்ட்ரியாவின் சம்பளம் 80 லட்சம் என்று சினிமாவை நேசித்து படம் எடுக்க வந்த அனுபவமில்லாத தயாரிப்பாளர் முதுகில் மிளகாய் மூட்டையை ஏற்றிவிட்டது இந்த கோஷ்டி.
எப்படியும் இந்த படத்துல பத்து கோடி நஷ்டம். அடுத்த படத்துலயாவது அதை எடுத்துரணும் என்று கடும் முயற்சி செய்து ஒரு இயக்குனரை கண்டு பிடித்திருக்கிறாராம் இதே தயாரிப்பாளர். அந்த இயக்குனர் ஏற்கனவே எடுத்த எல்லா படங்களும் மொட்டை மாடியில் காயப் போட்ட வத்தலை விடவும் மோசமான நிலைக்கு ஆளாகி, விமர்சிக்கவே தகுதியில்லாத படங்கள். அவரை தேடிப்பிடித்து இந்த தயாரிப்பாளர் பக்கம் தள்ளிவிட்டிருக்கிறாராம் அந்த முருக இயக்குனர்.
பட்டு வேட்டியோட யார் வந்து கோடம்பாக்கத்தில் இறங்கினாலும், ஜரிகையை மட்டும் கிழித்துவிட்டு அனுப்பும் கோஷ்டிகளால் புதிய தயாரிப்பாளர்களின் வருகை அபாய கட்டத்தை எட்டியிருக்கிறது.
லாபம்? ஒரே குத்தில் உருவியவர்களுக்கு!. நஷ்டம்? அதான் இவ்ளோ நேரம் படிச்சிங்களே!
0 comments:
Post a Comment