ஆஸ்கார் ரவிச்சந்திரன்: சிகரத்திலிருந்து அதலபாதாளத்துக்கு...
தான் பெற்ற பிள்ளைக்கு வயது ஐந்துக்கும் மேல் ஆகியும் பேச்சு வரவில்லையே என்ற கவலை அந்த தாய்க்கு. கோவில் குளமெல்லாம் சுற்றி அன்னதானங்கள் ஆயிரம் செய்து காத்திருக்கையில் பத்தாவது வயதில் பேச ஆரம்பித்த அந்தக்குழந்தை தாயைப் பார்த்து கேட்ட முதல் பேச்சு , ‘ஆத்தா நீ எப்ப தாலியறுப்பே?' என்பதுதானாம் என்றொரு குரூர கதை கிராம வட்டாரங்களில் இன்றும் புழங்கக் கூடியது.
இன்றைய காலை தினசரிகளைப் புரட்டியபோது காணப்பட்ட அதிர்ச்சிகரமான ஜப்தி விளம்பரம் ஏனோ எனக்கு அந்தக் கதையை நினைவூட்டியது. விநியோகஸ்தராக தனது சினிமா வாழ்க்கையை துவங்கி, இன்று தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற தயாரிப்பாளராக வலம் வரும் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் சொத்து ஜப்தி அறிவிப்புதான்.
இதையும் மீறி தப்பித் தவறி யாரும் தனது புகைப்படங்களைப் போட்டு விடக்கூடாதே என்பதற்காக தனது படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட எப்போதாவது ரகசியமாக சென்று பூனை போல் வந்துவிடுவார். அவர் பட சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கும் திசைப் பக்கம் தலை வைத்துக்கூட படுப்பதில்லை. அதையும் மீறி யாராவது படம் எடுத்துவிட்டால் அந்த ஸ்பாட்டிலேயே கேமராவை விலைகொடுத்து வாங்கிவிடுவார். ஆனால்.... இன்று ‘ஆத்தா எப்ப தாலியறுப்பே' கேஸ் போல் அவரது முதல் புகைப்படம் ஜப்தி அறிவிப்பு நோட்டீஸ்களில் வெளியாகி,அவரது எதிரிகளும் இரக்கப்படும் சூழலைக் கொண்டு வந்திருக்கிறது.
இந்த ஆஸ்கார் ரவியை அவர் சினிமாவுக்கு வந்த வெகு சில நாட்களிலிருந்தே தெரியும் என்கிற வகையில் இந்த ஜப்தி நடவடிக்கை குறித்து எனக்கு மகிழ்ச்சியோ அதிர்ச்சியோ இல்லை. காரணம் அசுர வளர்ச்சி என்பது எப்போதும் அதே வேகத்தில் வீழ்ச்சியிலேயே கொண்டுபோய் நிறுத்தும் என்பதற்கு இவர் இன்னுமொரு உதாரணம் அவ்வளவே.
கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்கார் ரவியைப்போல் இப்படி தலைகுப்புற வீழ்ந்த முன்னணி தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு டஜன் இருக்கும். சூப்பர்குட் நிறுவனம், லட்சுமி மூவி மேக்கர்ஸ், கே.டி.குஞ்சுமோன், ராஜகாளியம்மன் பிக்சர்ஸ், ஏ.வி.எம், போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள் இப்போது சினிமாவில் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. இந்தியன் தியேட்டர்ஸ் என்றொரு நிறுவனத்தின் தயாரிப்பாளர் முருகானந்தம் ‘மன்மதன்,' திருடா திருடி' போன்ற படங்களைத் தயாரித்தவர், இப்போது எடைக்குப் போட்டால் இருநூறு ரூபாய் தேறாத பழைய டி.வி.எஸ் 50'யில் போய்க் கொண்டிருக்கிறார். ‘கரகாட்டக்காரனுக்கு இணையாக வசூலித்த படம் ‘திருடா திருடி'. என்.எஸ்.சி ஏரியாவில் அந்தப்படத்தை ஏலத்தில் எடுக்க குவிந்த விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையில் கால்வாசிகூட இப்போது திரைத்துறையில் இல்லை.
இவரைப்போல பல வெற்றிப் படங்களைத் தயாரித்துவிட்டு டவுன் பஸ்ஸில் பயணம் போகும் தயாரிப்பாளர்கள் சிலரை தினமும் கோடம்பாக்கம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்தக் கொடூர சூழலை ஒத்துக்கொள்ளும் விதமாக தயாரிப்பாளர் சங்கத்தில் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு இலவச உணவு என்ற திட்டம் அமலில் இருப்பதே ஆதாரம். ஒரு கட்டத்தில் உச்சத்தில் இருக்கும் தயாரிப்பாளர், படுகுழியில் விழும் இந்த விபத்துக்கள் எப்படி நடக்கின்றன என்று பார்த்தால் அனைவருமே ஒருகட்டத்தில் அகலக்கால் வைத்தது தெரிய வரும். ஒருகோடி சம்பாதித்தவுடன் அடுத்த படத்தில் ஐந்து கோடிக்கு ஆசைப்பட்டு சூதாடுவார்கள். குதிரை குப்புறவிழுந்து குழியையும் பறித்துவிடுவது இங்கேதான்.
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment