சரோஜாதேவி நின்றால் அழகு.. நடந்தால் அழகு.. ஏன் அழுதாலும் அழகு! அழகை வர்ணித்த நீதிபதி!


madras movie

விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும்  நடத்தப்படும் ஸ்ரீநாகி ரெட்டி நினைவு திரைப்பட விருது வழங்கும் விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் சென்ற ஆண்டின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்துக்கான விருது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ படத்துக்கு வழங்கப்பட்டது.
ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான நீதியரசர் எம்.கற்பகவிநாயகம் விருதினை வழங்கினார். விருதாக கேடயத்துடன் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. ஸ்டுடியோ க்ரீன் சார்பில் அதன் இணை  தயாரிப்பாளர்  எஸ்.ஆர்.பிரபு  விருதை பெற்று கொண்டார்.
விருதினை வழங்கிய நீதியரசர் எம்.கற்பகவிநாயகம் பேசும்போது.”இந்த விழாவில் நான் கலந்து கொள்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன். ஒரு மனிதன் வாழ்க்கையில் உயர்வதற்கு  பின்பற்ற வேண்டியது ஐந்து விஷயங்கள். 1. இறை நம்பிக்கை.  2. உழைப்பு 3. ஒழுக்கம் 4. நாணயம் 5. மனிதநேயம்.
இந்த ஐந்து விஷயங்களையும் பின்பற்றி உயர்ந்தவர்களில் திரையுலகில் எனக்கு மூன்று பேரை மிகவும் பிடிக்கும். அவர்கள் திருவாளர்கள் பி.நாகிரெட்டி, ஆரூர்தாஸ், எஸ்.பி.முத்துராமன் ஆகியோர்தான். இவர்களின் ஆற்றல் சாதனைகளைவிட தனி மனித ஒழுக்கம் மிகச் சிறந்தது என்று மதிக்கப்படுகிறவர்கள்.
எனக்கு இன்றும் பழைய நினைவுகள் நிழலாடுகின்றன. எனக்கு சினிமா மீது மிகவும் ஆர்வம் பள்ளி. கல்லூரி பருவத்தில் நிறைய நாடகங்களில் நடித்திருக்கிறேன். சுமார் 500 நாடகங்களில் நடித்திருப்பேன். பாரதியாக, அர்ஜுனனாக எல்லாம் நாடகங்களில் நடித்திருக்கிறேன்.
எனக்கு சினிமாவில் நன்கு தெரிந்தவர் எம்.ஜி.ஆர்தான். நான் அவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். நான் எம்.ஜி.ஆருக்காக சிறை சென்று இருக்கிறேன். நான் சாதாரண வக்கீலாக இருந்தவன். என்னை அரசு வக்கீலாக்கி அழகு பார்த்தவர் எம்.ஜி.ஆர்தான். அப்போது ‘எனக்கென்ன தெரியும்..?’ என்றேன். ‘உனக்குத் தெரியும்..’ என்றார். நான் நீதிபதியானபோது அவர் உயிருடன் இல்லை. ஆனால் அவரது ஆசீர்வாதம் இருந்தது.
இங்கே சரோஜாதேவி வந்திருக்கிறார். அவர் நின்றாலும் அழகு; நடந்தாலும் அழகு; ஆடினாலும் அழகு; ஓடினாலும் அழகு; பேசினாலும் அழகு;  ஏன் அழுதாலும் அழகுதான்..! எம்.ஜி.ஆர். சிவாஜி என்கிற இரு இமயமலைகளை ஈர்த்தவர் சரோஜாதேவி.
நாகிரெட்டி சாதனைகளாலும் பேசப்படுகிறவர்.  இந்த நிகழ்ச்சியிலும் ரெட்டியாரின் ஆசீர்வாதம் நிறைந்து இருக்கிறது. உழைப்பவரே உயர்ந்தவர் என்பார்  எம்.ஜி.ஆர். உழைப்பவரை உயர்த்தியவர் நாகிரெட்டி அவர்கள்.
ஒரு முறை ஏவி.எம். வீட்டு திருமண விழாவில் ஒரு பந்தியில் சாப்பிட்ட இலைகளை எடுக்க ஆள் வரவில்லை. ரெட்டியாரே சாப்பிட்ட இலைகளை எடுத்தார். பின்னர் சாப்பிட வந்தவர்கள் எடுக்க ஆரம்பித்தனர் அவ்வளவு எளிமையானவர் நாகிரெட்டியார். அவர் மற்றவர்களுக்காக வாழ்ந்தவர்; பிறருக்காக வாழ்ந்து பெருமை பெற்றவர்.
மரங்களில் 3 வகை மரங்கள் உண்டு.  பாதிரி மரம் பூக்கும், காய்க்காது. பலா மரம் காய்க்கும். பூக்காது. மாமரம் பூக்கும்.. காய்க்கும்.. பழுக்கும். அதே போல மனிதர்களிலும் 3 வகை உண்டு. சிலர் பேசுவார்கள். செய்ய மாட்டார்கள்.  சிலர் செய்வார்கள், பேச மாட்டார்கள். சிலர் மட்டுமே பேசுவார்கள், செய்வார்கள், உதவுவார்கள்.
நாகி ரெட்டியார் மாமரம் போன்றவர். அவர் பேசுவார், செய்வார், உதவுவார். அவர் பெயரில் விருது பெறும் மெட்ராஸ்’ தயாரிப்பாளர், படக் குழுவினரை பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.
படிக்கும்போது நான் மந்தமான மாணவன்தான். நான் எஸ்.எஸ்.எல்.சியில் பெயிலாகி விட்டேன். தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தேன். காந்தியின் ‘சத்திய சோதனை’ படித்தேன். அது என் மனதை மாற்றியது. பாடமாக அமைந்தது.
இதுபோல் நல்ல படம் எடுங்கள் பாடமும் சொல்லுங்கள். இப்போது படங்களில் 99% வன்முறைதான் இருக்கிறது. கருத்து ஒரு சகவிகிதம்தான் இருக்கிறது. எம்.ஜி.ஆர். படங்களில் எவ்வளவு கருத்தைக் சொல்லியிருக்கிறார்..? ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தார்’ பாடலை கேட்டுப் பாருங்கள். ‘உன்னை அறிந்தால்’ பாடலைக் கேட்டுப் பாருங்கள். இரண்டே வரிகளில் எவ்வளவு கருத்துகள்…? படம் எடுங்கள் பாடமும் சொல்லுங்கள். படங்களில் நல்ல கருத்தும் இருக்க வேண்டும்.” என்று கூறினார்.
கதை வசனகர்த்தா டாக்டர் ஆரூர்தாஸ் பேசும்போது, “நான் சினிமாவுக்கு வர நினைத்ததே இல்லை. சினிமா மீது எனக்கு விருப்பமோ, கனவோ, லட்சியமோ, ஆசையோ இருந்ததில்லை. என் அப்பாவின் விருப்பமான தமிழாசிரியர் ஆகவே விரும்பினேன்.. புலவருக்குப் படித்தேன். நான் எழுதிய ஒரு நாடகத்தைப் பார்த்து தஞ்சை ராமையாதாஸ் என்னை சினிமாவுக்கு அழைத்தார். என்னை அவரது உதவியாளராக்கி வசனம் எழுதப் பயிற்சியினைத் தந்து என்னை ஊக்குவித்தார்.  இதுவரை 1000 படங்கள் முடித்துவிட்டேன்.
விஜயா வாஹினி ஸ்டுடியோ என் வீடு மாதிரி. நாகிரெட்டி எனக்கு சகோதரர் போன்றவர். 50 ரூபாய் மாத சம்பளத்தில் என்னை முதலில் வேலைக்கு சேர்த்துக் கொண்டவர். நாகி ரெட்டிதான் சின்னப்பா தேவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். நல்ல உழைப்பாளி. தொழிலாளர்களை நம்பியவர்…” என்றார்.
சரோஜாதேவி பேசும்போது, ”நானும், எம்.ஜி.ஆரும் நடித்த ‘எங்கள் வீட்டுப் பிள்ளை’ படப்பிடிப்பு வாஹினி ஸ்டுடியோவில் எட்டாவது தளத்தில் நடந்தது. முதல் நாள் அந்தக் கடைத் தெரு செட் தீப்பிடித்து எரிந்து விட்டது. இதைப் போய் அவரிடம் சொன்ன போது ‘தொழிலாளர்கள் பார்த்துக் கொள்வார்கள்’ என்றார். அந்த அளவுக்கு தொழிலாளர்கள் மீது நம்பிக்கை வைத்தவர். அவர்களும் முழு மூச்சாக இறங்கி ஒரே நாளில் சரி செய்து விட்டார்கள்…” ” என்றார்.
இந்நிகழ்வில் ‘மெட்ராஸ்’ படக்குழுவைச் சேர்ந்த நடிகர் கலையரசன், நடிகை ரித்விகா, கலை இயக்குநர் ராமலிங்கம் ஒளிப்பதிவாளர் முரளி, எடிட்டர் பிரவீன் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.  இந்த விருது வழங்கும் விழாவை  இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் முன்னெடுத்து வழிகாட்டினார்.
முன்னதாக அனைவரையும் விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளை குழுமத்தைச் சேர்ந்த வெங்கட்ராம ரெட்டி, பாரதி ரெட்டி ஆகியோர் வரவேற்றனர். நிறைவாக பொது மேலாளர் ராம்பாபு  நன்றி கூறினார்.

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose