நின்றது திருமணம்... பிரிந்தனர் நடிகை த்ரிஷா - வருண் மணியன்!


திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை திரிஷா, தொழிலதிபர் வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் ரத்தாகிவிட்டதாக நேற்றே செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது இவர்களின் திருமணம் நின்றுபோய்விட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர், த்ரிஷா. இவருக்கும், தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் காதல் இருந்து வந்ததாக முதலில் பேசப்பட்டது. இருவரும் ஜோடியாக பட விழாக்களில் கலந்துகொண்டார்கள். இவரைத்தான் த்ரிஷா திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்பட்ட நிலையில், திடீரென்று இவர்கள் உறவு முறிந்தது.

அதைத் தொடர்ந்து த்ரிஷாவுக்கும், தொழிலதிபரும், பட அதிபருமான வருண் மணியனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் தனி விமானத்தில் தாஜ்மகாலுக்கு போய்வந்தார்கள். இவர்களின் காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டார்கள். த்ரிஷா - வருண் மணியன் நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி 23-ந்தேதி சென்னையில் நடந்தது.

'வாயை மூடி பேசவும்', ‘காவியத் தலைவன்' ஆகிய 2 படங்களுக்குப் பிறகு ஜெய் கதாநாயகனாக நடிக்க, திரு இயக்கத்தில் ஒரு புதிய படம் தயாரிக்க திட்டமிட்டார் வருண் மணியன். இந்தப் படத்தில் முதலில் கதாநாயகியாக த்ரிஷா நடிப்பதாக இருந்தார். திடீரென்று, அந்தப்படத்தில் இருந்து த்ரிஷா விலகிக்கொண்டார். அவருக்கு பதில் டாப்சி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்த பிரச்சினையில்தான் த்ரிஷாவுக்கும், வருண் மணியனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

திருமணத்துக்கு பிறகும் த்ரிஷா தொடர்ந்து நடிக்க விரும்புகிறார். இப்போது அவர் ‘பூலோகம்', ‘அப்பாடக்கர்', ‘போகி', கமலுடன் ஒரே இரவு ஆகிய தமிழ் படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து அவர் புதிய படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதை வருண் மணியன் குடும்பத்தினர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

த்ரிஷாவுக்கும், வருண்மணியனுக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இவர்களின் திருமணம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. நிச்சயதார்த்தத்தின் போது த்ரிஷா விரலில் வருண்மணியன் அணிவித்த மோதிரத்தையும் த்ரிஷா கழட்டி விட்டாராம்.

இருவருக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக பேச்சுவார்த்தையும் இல்லை. சமீபத்தில் நடந்த வருண்மணியனின் தங்கை திருமணத்துக்கு த்ரிஷா போகவில்லை. இந்தநிலையில் தான் த்ரிஷா-வருண் மணியன் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இரு தரப்பும் இதுகுறித்துப் பேச விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டனர்.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose