ஒரு பகல், ஒரு ராத்திரி… இதற்குள் நடக்கும் கதை. முடிந்தவரைக்கும் விறுவிறுப்பாக சொல்ல வேண்டும் என்று முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சத்தியமூர்த்தி. ஒரு பில்டிங்கும் கொஞ்சம் ராத்திரியும் உதவிய அளவுக்கு படத்தில் பங்குபெற்ற கலைஞர்களும், திரைக்கதையும் உதவாமல் போனதால் அடிச்சு துவைச்சு தொங்க போட்ட பீலிங்ஸ்.
ஜெய் குகைனியை காதலிக்கிறார் ஷரன். சொந்த ஊருக்கு வரும் குகைனி, சென்னைக்கு திரும்புவதற்கு பஸ் ஏறும் நேரத்தில், பின் துரத்தும் போலீசுக்கு அஞ்சி தன் கையில் இருக்கும் திருட்டு வைரத்தை குகைனியிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்புகிறான் அதே ஊர் அண்ணன் ஒருவன். (இவனை துரத்தும் அந்த போலீஸ் போல ஸ்டேஷனுக்கு ரெண்டு பேர் இருந்தா வௌங்கிரும்) உள்ளேயிருப்பது என்னவென்றே தெரியாமல் அதை ஹேண்ட் பேக்குக்குள் போட்டுக் கொண்டு சென்னை திரும்பும் குகைனிக்கு சென்னையில் நடப்பதென்ன? வைரத்தை ஒப்படைத்தவனுக்கு நாகர்கோவிலில் நடக்கும் கும்மாங்குத்து என்ன? நடுவில் குகைனியை காதலிக்கும் ஷரன் தன் காதலியை சிக்கலில் இருந்து மீட்டாரா? இதுதான் நாலு வரியில் அடங்கக் கூடிய CSK.
தன்னை விழுந்து விழுந்து காதலிக்கும் ஷரனை ஏன் வெறுக்கிறார் குகைனி? அதை புரிந்து கொள்வதற்குள் அந்த பில்டிங்குக்குள் சிக்கிக் கொள்கிறார் அவர். ரெஸ்ட் ரூமிற்குள் நுழையும் அவர், அங்கிருந்து வெளியேறினாரா, இல்லையா என்பதை கூட அறிந்து கொள்ளாத சக ஊழியர்கள்? நல்லவேளை… உள்ளே போன காதலி வெளியே வரவில்லை என்பதை அறிந்ததும் பரபரப்பாகும் ஷரன், இரண்டு போலீசோடு உள்ளே வருகிறார். வந்த போலீஸ் கொட்டாவி விடக் கூட லாயக்கில்லாதவர்களாக இருக்கிறார்கள். செக்யூரிடி அலுவலகத்தின் கண்ணாடி சில்லு சில்லாக உடைந்திருக்கிறது. தொலைந்து போனவளின் செருப்புகள் கிடக்கிறது. அதைவிட வேறென்ன வேண்டும். வந்த கொட்டாவியை வாகாக விட்டுவிட்டு வெளியேறுகிறது போலீஸ். அதற்கப்புறம் ஷரனே காதலியை காப்பாற்றுவதுதான் பின்பாதி.
ஜெய் குகைனி சிக்கிக் கொள்கிற சூழ்நிலை வேண்டுமானால் அபத்தமாக இருக்கலாம். ஆனால் அங்கு சிக்கிக் கொண்டபின் அவர் தவிக்கும் தவிப்பு அப்படியே நமக்குள் இறங்குகிறது. அவ்வளவு பெரிய ஆஜானுபாகுவான அவர், கைகள் கட்டப்பட்டு அந்த பிளாஸ்டிக் பேரலுக்குள் அடங்குவதெல்லாம் பகீர் நிமிஷங்கள். அவர் இருக்கிற ஓங்குதாக்கு உருவத்திற்கு வில்லன்களை ஊதியே விரட்டியிருக்கலாம். ஆனால் கடைசிவரை கேமிராவை உடைக்கிறார், பூந்தொட்டியை தட்டிவிடுகிறார். ஆனால் வாசல் பக்கம் இருக்கிற கண்ணாடியை உடைப்பதற்கு என்னவாம்?
அதற்கப்புறம் வில்லன்கள்! அதுவும் அந்த நாராயணனுக்கு பெண் வேடம் போட்டால் பொருத்தமாக இருப்பார். இவரை வில்லன் என்று ஏற்கவே மனசு ஒப்பாமலிருக்கும்போது, சம்பந்தப்பட்ட பார்ட்டி ஒரு கொலையை வேறு பண்ணித்தொலைக்கிறது. ஹய்யோ…! வைரம் என்கிறார்கள். ஏழு கோடி திருட்டு என்கிறார்கள். என்னென்னவோ சொல்கிறார்கள். எரிச்சல்…
சமயங்களில் வருகிற திருப்பங்கள் மட்டும் ஒரு சின்ன ‘அட…!’வை வீசிவிட்டு போகிறது. உதாரணத்திற்கு அடியாட்கள் சூழ பிணைக் கைதி போல வரும் மிஷால், காரிலிருந்து தப்பி நெடுஞ்சாலையில் தப்பி ஓடி கடைசியில் அதே காரில் லிப்ட் கேட்டு மாட்டிக் கொள்கிறபோது பச்சக் என்று பஞ்சராகிவிடுகிறது மனசு.
நேற்று வேலைக்கு சேர்ந்தவன் கையில் பல கோடி பெறுமானமுள்ள வைரத்தை கொடுத்தனுப்புகிறான் வில்லன். அதுவாவது பரவாயில்லை. போலீஸ் துரத்துச்சு. வைரத்தை பஸ்ல வர்ற என் தோழி ஒருத்திகிட்ட ஒப்படைச்சிருக்கேன். வேணும்னா விசாரிங்க என்று சொல்வதற்கு என்னவாம்? எங்கெல்லாம் இறுக்கி சிமென்ட் பூச வேண்டுமோ, அங்கெல்லாம் விளக்கெண்ணையை பூசி வைத்திருக்கிறார்கள் திரைக்கதையில்.
படத்தில் மருந்து தெளித்தார் போல சிரிப்பலைகள். பத்திரிகையாளர் கோவி.லெனின் வசனம் எழுதியிருக்கிறார். அவருக்கும் விளையாட கிரவுண்ட் வேண்டாமா? கிடைத்த சிறிய இடத்தில் நச்சென விளையாடியிருக்கிறார்.
படத்தின் ஆகப்பெரிய கவர்ச்சி, ஒளிப்பதிவும், பின்னணி இசையும்தான். ஒளிப்பதிவாளர் ஸ்ரீசரவணனுக்கு பாராட்டுகள். இசையமைப்பாளர் சித்தார்த் மோகனின் பாடல்கள் செம ஸ்லோ. மெதுவாக நகர்ந்தால் மெலடி என்ற நம்பிக்கை எப்படிதான் வருகிறதோ?
அதுவரை நகர்ந்த கதை கடைசியில் ஒரு சிறுகதையின் நளினத்தோடு முடிவதை மட்டும் மனசார பாராட்டலாம்.
CSK- ஆளில்லாத கிரவுண்டில் பால் இல்லாத மேட்ச்!
0 comments:
Post a Comment