மதம் மாறினாலும் பெயரை மாற்றும் எண்ணமில்லை - யுவன்


இஸ்லாமிய மதத்தைத் தழுவினாலும் பெயரை மாற்றிக் கொள்ளும் எண்ணமில்லை என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்தார். பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனும், தமிழ் பட உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவருமான யுவன் சங்கர் ராஜா ஏற்கனவே 2 திருமணங்கள் செய்து மனைவிகளை விவாகரத்து செய்தார். 

சமீபத்தில் இஸ்லாமிய மதத்துக்கு மாறிய அவர், கீழக்கரையைச் சேர்ந்த ஜெபருன்னிசா என்ற பெண்ணை 3-வதாக திருமணம் செய்தார். இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு அவர் ஊடகங்களைச் சந்திக்கவே இல்லை. நேற்றுதான் முதல் முறையாக தனது இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக செய்தியாளர்களைச் சந்தித்தார் யுவன்.

அப்போது அவரிடம், இஸ்லாமியராக மாறிய பிறகும் பெயரை மாற்றிக் கொள்ளாதது ஏன் என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த யுவன், "நான் சினிமாவுக்கு வரும்போதே யுவன்சங்கர்ராஜா என்ற பெயரில்தான் அறிமுகமானேன். அந்தப் பெயர்தான் ரசிகர்களுக்கும் தெரியும். புதிதாக பெயர் சூட்டிக்கொண்டால் அந்த பெயரை ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா? என்பது சந்தேகம்தான். அதனால் தான் பெயரை மாற்றவில்லை," என்றார். 


உங்களுடைய 3-வது திருமணத்தில் உங்களின் தந்தை இளையராஜா கலந்துகொள்ளவில்லையே? உங்களின் திருமணத்தை அவர் ஏற்றுக்கொண்டாரா? அல்லது எதிர்ப்பு தெரிவித்தாரா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த யுவன், "எதிர்க்கவில்லை. ஊடகங்கள் குறிப்பிட்டப்படி, அது ரகசிய திருமணம் அல்ல. என் குடும்பத்தினர் அனைவருக்கும் முன்பே தெரியும். அப்பாவிடம் தெரிவித்தபோது உனக்கு எது சந்தோஷமோ அதை செய் என்று அனுமதி கொடுத்தார். என் குடும்பத்தினர் அனைவரும் அந்த திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

பெண் வீட்டாருக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டதால் உடனடியாக திருமணத்தை நடத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. அப்பாவை சந்தித்து திருமணத்துக்கு அழைத்தபோது, எப்போது திருமணம்? என்று கேட்டார். 2 நாளில் திருமணத்தை நடத்தவேண்டிய சூழ்நிலை பற்றி அவரிடம் விளக்கினேன். நேரம் கிடைக்காத காரணத்தால் அப்பா என் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. திருமணத்தை முடித்த மறுநாளே அப்பாவிடம் சென்று, ஆசி பெற்றேன்," என்றார்.

விரைவில் நெல்லையில் யுவன் சங்கர் ராஜாவின் யுஒன் என்ற இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. மே 9-ம் தேதி நடக்கும் இந்த இசை நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதியை சுற்றுச்சூழல் மற்றும் வனப்பகுதிகளை மேம்படுத்த பயன்படுத்தப் போகிறார்களாம்.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose